அண்ணாந்து பார்

 என்.சொக்கன் எழுதிய அண்ணாவின் ஒரு விரிவான வாழ்க்கை வரலாறு.

அண்ணாவைப் பற்றிய கதைகளை, சாதனைகளை நான் என்னுடைய சிறிய வயதிலிருந்தே கேட்டுள்ளேன். இதற்கு முக்கிய காரணமானவர் என் அப்பா, அவர் ஒரு தீவிரமான தி.மு.க தொண்டர். அண்ணாவைத் தன் சொந்த அண்ணாவாக ஏற்றுக்கொண்ட பல்லாயிரக் கணக்கான தம்பிகளில் என் அப்பாவும் ஒருவர். இருப்பினும் எனக்கு எப்போதும் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது இல்லை.

“குள்ளமான உருவம். ஆனாலும் அண்ணாந்து மட்டுமே பார்க்க முடிகிறது. அவரால் தொட முடிந்த சில உயரங்களை இன்று வரை இன்னொருவரால் நெருங்க முடியவில்லை. ஒரு விரிவான வாழ்க்கை வரலாறு” என்று புத்தகத்தின் முன் பக்கத்தில் பார்த்த உடன் இந்த புத்தகத்தைப் படிக்கும் ஆசை வந்தது. சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. வேலையின் பளு காரணமாக வாங்கிய புத்தகங்களை படிக்காமல் வைத்து இருந்தேன். கடந்த சில வாரங்களாக வாங்கிய புத்தங்களைப் படிக்க ஆரம்பித்தேன். மேலே சொன்ன காரணத்துக்காக இந்த புத்தகத்தை முதலில் படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சில பக்கங்களைப் படித்த பின் மீண்டும் முதலில் இருந்து படிக்கும் ஆர்வம் அவ்வப்போது எழுந்தது. இதனால் புத்தகத்தை முழுவதும் படித்து முடிக்கும் முன்னரே இருமுறை முதலில் இருந்து படிக்க ஆரம்பித்தேன். அவ்வளவு எளிமையாகவும், அழகாகவும் எழுதியுள்ளார் சொக்கன் அவர்கள். இதில் வரும் பல சம்பவங்கள் என் அப்பா முலமாக ஏற்கனவே எனக்கு தெரிந்தவை என்றாலும் இப்புத்தகம் முதல் முறை படிக்கும் அனுபவத்தை அழகாக கொடுத்துள்ளது. சிறு வயதில் இருந்த அவருடைய குணாதியசங்களைப் பற்றியும், படிப்பில் அவருடைய ஈடுபாடுகள், அரசியலில் அவருடைய அணுகுமுறைகள் பற்றியும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார் சொக்கன். படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே கவனத்தில் வைக்க வேண்டும் என்ற கொள்கையை அண்ணா வலியுறுத்தியும் அதைக் கடைப்பிடித்தும் வாழ்ந்துள்ளார்.

அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அண்ணாவின் வாழ்க்கையை அறிந்து கொண்டால் போதும். கலைத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட அண்ணா, அதன் மூலம் சொல்ல வந்த கருத்துகளை மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல முடியும் என்பதை அறிந்து அதை நல்ல முறையில் உபயோகித்தவர். இந்த விஷயத்தில் பெரியார் அண்ணாவிற்கு எதிரான கருத்து கொண்டு இருந்தார் என்பது மிகவும் ஆச்சரியமூட்டியது.

அண்ணா-பெரியாரின் உறவை விளக்கிய விதம் அருமை. இது போன்ற இன்னொரு உறவை பார்க்க முடியமா என்பது அரிதே.

இப்புத்தகம், நீதிக் கட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது வரையிலான சரித்திரத்தைத் தெளிவாக விளக்கியுள்ளது.

தி.மு.க 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின், கட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகளுக்குள் ஆட்சிக்கு வருவது சரியா என்று எண்ணியுள்ளார் அண்ணா. காங்கரஸில் காமராஜர் போன்ற பெருந்தலைகள் தோல்வியைக் கண்டு வருத்தம் தெரிவித்து, எதிர் கட்சியில் அருகதை உள்ள நல்ல தலைவர்கள் இல்லாமல் போனதே என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் மூலம், அண்ணாவின் அரசியல் நாகரிகங்களைத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது இப்புத்தகம்.

தி.மு.கவின் ஆட்சியில் அண்ணாவின் சாதனைகளைப் பட்டியல் இட்ட போது இரண்டு ஆண்டுகள் தான் அண்ணா முதல்வராக இருந்தார் என்று என் அப்பா கூறியது எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஆச்சிரியத்தை சொக்கன் அவர்களே இப்புத்தகத்தில் வெளிக்காட்டியுள்ளார்.

இப்புத்தகத்தின் பின் அட்டையில் “இனி ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி. எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. அண்ணாவின் பெயரைச் சொல்லாமல் எந்தவொரு சக்தியாலும் இன்று அரசியல் செய்ய முடியாது” என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை புத்தகத்தை முடிக்கும் போது உணர்ந்தேன்.

இந்த புத்தகத்தை எழுதிய என்.சொக்கன் அவர்களுக்கும், பதிப்பித்த கிழக்கு பதிப்பகத்திற்கும் எனது நன்றி.